நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) காலை விஜயம் செய்திருந்தார்.
வைத்தியசாலை சூழலை கண்காணித்த ஜனாதிபதி தொடர்ந்து டெங்கு விசேட சிகிச்சைப் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணருடனும் கலந்துரையாடினார்.
நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரசேதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்திசாலையின் டெங்கு நோயாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைப்பதற்கு அவசியமான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், வைத்தியசாலையின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்த ஜனாதிபதி அதற்கு அவசியமான வசதிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதுடன் சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக மாகாண நிறுவனத்தினூடாக மேற்கொள்ள வேண்டிய கடமை பொறுப்புக்களையும் உடனடியாக வழங்குவதற்கு முன்வருமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து டெங்கு நோயாளர் வாட்டுக்கு அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு செயற்பாடுகளையும் பார்வையிட்டதுடன் நோயாளர்களின் சுகநலன்களையும் விசாரித்தார்.