மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால் நாளை (28) தொடக்கம் இரு வாரங்களுக்கு மக்கள் பங்களிப்புடன் சூழலை தூய்மையாக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு நடவடிக்ககை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன ஆகியோரின் ஆலோசகைகமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சுகாதார அமைச்சு, உள்ளூராட்சி சபைகள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் பங்களிப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவுள்ளது.
இவ்வருடம் கடந்த காலப்பகுதியில் மட்டும் 70,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 25 வீதமானவர்கள் 19 வயதுக்கும் குறைந்தவர்கள் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதுள்ள பதில் சுகாதார பணிப்பாளர் சுனில் டி அல்விஸ் தலைமையில் இன்று (27) காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு திட்ட முன்னேற்ற ஆராய்வுக்கூட்டத்தில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
சிவில் பாதுகாப்புத் திணைக்கள படையினர் 100 பேர் டெங்கு நோயாளர்களுக்கான பராமரிப்பின் போது உதவி செய்வதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை, கந்தான பிரதேச வைத்தியசாலை, தங்கொட்டுவ பிரதேச வைத்தியசாலை, தலங்க பிரதேச வைத்தியசாலை, பிலியந்தல பிரதேச வைத்தியசாலை, வேதர பிரதேச வைத்தியசாலை மற்றும் ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலை என்பவற்றில் சிவில் படையினர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.