ஆசிரியர் நியமனங்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பில் புதிய கொள்கை இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
'புத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை' திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட பொலன்னறுவை சுங்காவில முஸ்லிம் வித்தியாலய புதிய கட்டிட திறப்பு விழாவில் நேற்று (22) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்க முடியாது என்றும் அவ்வாறு மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு மாற்றப்படவேண்டும் என்றும் சுற்றரிக்கை வெளியிடப்படும்.
பிள்ளைகளின் கல்வி சீராக இருக்கவேண்டும் என்று இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகை கிடைக்காமல் இருக்கக்கூடாது. அனைத்து இன மக்களினதும் எனக்கு ஆதரவாக வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் பாராபட்சமின்றி சேவையாற்றுதல் ஜனாதிபதி என்றவகையில் எனது கடமையாகும் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிக உற்சாகமாக வரவேற்றனர். இதன்போது நினைவுபடிகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ஐந்து வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளித்தார்.