மாகாண மட்டங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முதலமைச்சர் அண்மையில் அனைத்து மாகாண முதலமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாலோசனையை வழங்கினார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அப்புதிய நியமனங்களுக்கு மத்திய அரசினூடாக நிதியொதுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார் என்று கூறிய முதலமைச்சர், அதற்கமைய அத்தியவசிய சேவையான மாகாண சுகாதார சேவையில் நிலவும் தாதியர் பற்றாக்குறை உட்பட ஏனைய வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் இணைத்துக்கொள்ளல் செயற்பாட்டில் இதுவரை பின்பற்றிய நடைமுறை மாற்றப்பட்டு மாகாண மட்டத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தகமையுடைவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் இதனூடாக கஷ்டப் பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள ஆளணி பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு மீள திரும்பிப் பெறப்பட்ட நிதியை மீண்டும் மாகாணசபைகளுக்கே வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் 2017ம் ஆண்டுக்காக மாகாணசபைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை எவ்விதத்திலும் குறைக்காமல் முழுமையாக பெற்றுத்தருமாறு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என்றும் முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மத்திய மாகாணசபைத் தவிசாளர் எல்.டீ. நிமலசிறி தலைமையில் மத்திய மாகாணசபைக் கூட்டம் நடைபெற்றதுடன் மத்திய மாகாண சபை அமைச்சரான காலம் சென்ற லால் விஜேநாயக்க தொடர்பில் இதன்போது அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
mu_central province