பம்பலபிட்டி ராமநாதன் இந்துக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சேர் பொன்னம்பலம் ராமநாதனின் உருவச்சிலை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று (22) திறந்து வைக்கப்படவுள்ளது.
பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த அருணாசலம் பொன்னம்பலம் செல்லாச்சி அம்மையார் தம்பதிகளின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்த சேர் பொன்னம்பலம் ராமநாதன் ஆரம்பக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்கக்ச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகிய ராமநாதன் அவர்கள் பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.
1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்லப் பொன்னம்பலம் இராமநாதன் தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.