அண்மைக்காலமாக இளம் பிள்ளைகள் மற்றும் இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பில் அறிக்கையிடும் போது ஊடகங்கள் பொறுப்புடன் வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரியுள்ளது.
இத்தகைய தற்கொலை சம்பவங்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக அளவுக்கு அதிகமாக வௌியிடப்படுகின்றமையானது நாட்டில் தற்கொலை செய்யும் எண்ணத்தை இல்லாதொழிப்பதற்கு பதிலாக அது தொடர்பான எண்ணத்தை தூண்டுவதாக அமைகிறது என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய செய்திகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வௌியடப்படும் போது ஏற்கனவே பிரச்சினையான மனநிலையில் உள்ளவர்களுக்கு அது சிறந்த தீர்வு என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் உளவியல் ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரசபை, பிரச்சினையான உளவியலுடன் உள்ளவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கும் திட்டம் இலங்கையில் உள்ளது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
உளவியல் ஆலோசனைகளை வழங்கும் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் நாட்டில் உள்ளன. 18 வயதுக்கு குறைந்த ஒருவர் உளவியல் ரீதியான பிரச்சினைகளை சந்திப்பார்களானால் அவர்களுக்கு உதவி வழங்க சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எப்போதும் தயாராகவுள்ளது. அதற்கான விசேட உளவியல் ஆலோசனை மையம் அதிகாரசபையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரசபையின் மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிளினூடாகவும் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தமது உயிரை பணயம் வைக்காமல் அவசியமான ஆலோசனைகளை பெற்று பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு அதிகாரசபை பிள்ளைகள் மற்றும் வளர்ந்தோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.