பாடசாலை சீருடையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (16) கண்டி, அஸ்கிரியவில் அமைந்துள்ள சந்ராநந்த பௌத்த கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கல்வி முறையானது பிரிவென மற்றும் விகாரை ஆகியவற்றை மையமாக கொண்ட கல்வி முறையானது இலங்கையில் மனித விழுமியங்களையும் உணர்வுகளையும் வளர்த்தது. சமூகத்தை சமய தளங்களுடன் இணைந்த வகையில் கட்டியெழுப்புவதற்கு அனைத்து சமயத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்.
நவீன காலத்தில் இணையதளமும் முகப்புத்தகமும் பிள்ளைகளுடையதும் சமூகத்தினதும் ஒழுக்க விழுமியங்களையும் தார்மீக மதிப்புக்களையும் நாசமாக்குகின்றன. சில ஊடகங்கள் இணையதளமூடாக சமூகத்தில் உள்ள ஒற்றுமையை இல்லாமல் செய்யும் வகையிலான விடயங்களை வௌியிடுகின்றனர். இதனால் நாட்டில் குழப்ப நிலை ஏற்படுகிறது. எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ மக்களின் நாளாந்த வாழ்க்கையை தடை செய்யும் வகையில் நடந்துகொள்வதானது அவர்களுடைய கல்வி மற்றும் நாகரீகத்தை சார்ந்த விடயமாகும்.
கடந்த சில மாதங்களில் 166 கத்தோலிக்க ஆலயங்கள் தாக்கப்பட்டதாக ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரகாணலின் போது தனிநபர் ஒருவர் தெரிவித்ததையடுத்து அறிக்கை விடுவது தொடர்பில் பேராயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் கருதினால் ரஞ்சித்திடம் வினவியபோது அவ்வாறான நிகழ்வுகள் பதிவாகவில்லை என்று தெரிவித்தார். சமூகத்தை குழப்பும் வகையில் ஒருவர் இத்தகைய செய்திகளை வௌியிட்டால் அவற்றை பொருட்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்
பாடசாலையில் பல்வேறு திறமைகளை வௌிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில், அஸ்கிரிய மகாநாயக்க சங்கைக்குரிய வரக்காகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர் உட்பட மகா சங்கத்தினர், மல்வத்த அநுநாயக்க சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர், பாடசாலை அதிபர் சங்கைக்குரிய கலாநிதி கொடகம மங்கள தேரர், அமைச்சர்களான லஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி. திஸாநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பலர கலந்துகொண்டனர்.