கிராமிய பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நாடு பூராவும் சிறு அளவிலான புடவை சார் உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறு அளவிலான புடவைச்சார் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 50 தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மிகுதி 100 தொழிற்சாலைகளிலும் இவ்வருட இறுதிக்குள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தைக்கு பொறுத்தமான வகையில் புடவைச்சார் உற்பத்திகளை மேற்கொள்வது தொடர்பில் 6 மாத பயிற்சி நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை உற்பத்தி செயற்பாடுகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு தொழிற்சாலையில் 40 பேர் தெரிவு செய்யப்படுவதுடன் அவர்களை பயிற்றுவிப்பதற்காக பயிற்சி பெற்ற ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பயனாளிகளை தெரிவு செய்யும்போது இடம்பெயர்ந்த குடும்பங்கள், யுத்தத்தினால் குடும்பத் தலைவர்களை இழந்தவர்கள் போன்றோருக்கு அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது.
பயனாளிகளை பயிற்றுவிக்க தேசிய சுயமுயற்சியாளர்கள் அபிவிருத்தி அதிகாரசபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தேசிய அலங்கார மத்திய நிலையம், தேசிய சிற்பச் சபை ஆகியவற்றில் இருந்து வளவாளர்களாக கலந்துகொள்கின்றனர்.
இவ்வுற்பத்திகளை தேசிய கொள்வனவாளர்களுக்கு விற்பனை செய்வதுடன் பாரியளவிலான ஏற்றுமதியாளர்களின் உப குத்தகைக்காரர்களாக செயற்படுவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஏற்பாடுகளையும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சினூடாக செய்து கொடுக்கப்படும்.
இப்புடவைச்சார் உற்பத்தி தொழிற்சாலைகளினூடாக நேரடியாக 6000 கிராமிய பெண்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைப்பதுடன் இத்திட்டத்திற்காக 287.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.