சிறிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தமுடியாமல் சிறைகளிலுள்ளோருக்காக எதிர்காலத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பதற்காக உரிய தரப்பினருடன் கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
2015 ஆண்டில் 43.7 சதவீதமான கைதிகள் தண்டப்பணம் செலுத்த முடியாமையினாலேயே சிறைகளிலிருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது அபத்தமானத எனவும், தற்போதுள்ள சட்டதிட்டங்கள், கொள்கைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஊடாக அதற்கான துரித தீர்வை எட்டவேண்டுமென குறிப்பிட்டார்.
இலங்கை சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (13) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கைதிகள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்காக அனைவரும் பாடுபட வேண்டும். சிறைகளில் உள்ளவர்களை மனிதாபிமானத்துடன் நோக்கி அவர்கள் அந்த நிலைக்கு வருவதற்க்கு காரணமான சமூக நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு.
கைதிகள் மற்றும் சிறைச்சாலைகளின் வசதிகள் தொடர்பில் தற்போதுள்ள நிலையைத் தாண்டி மனிதாபிமானம் மிக்க திட்டத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கைதிகளில் 46.4 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் காரணமாக சிறையிலிருப்பதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும், அது 2011 ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது தெளிவான அதிகரிப்பாகும். போதைபொருள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தலின் வினைத்திறனை அது காட்டுகிறது.
எவ்வாறாயினும் போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக இதனைவிடவும் வினைத்திறனான திட்டத்தின் தேவை ஏற்பட்டுள்ள என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கைதிகளின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை இதன்போது வழங்கிய ஜனாதிபதிக்கு , சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க தலைவர் பீ.ஏ.கிரிவந்தெனிய, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.பீ.தனசிங்க உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்