“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கை மொபிடெல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இக்கணனி தரவு கட்டமைப்பானது அரசின் சேவை வழங்கும் செயன்முறையை பலப்படுத்தி மக்களின் பிரச்சினைகள், முறைப்பாடுகள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஜனாதிபதியிடம் வினைத்திறனாகவும் தெளிவாகவும் முன்வைப்பதல், பயனுறுதியான துரித தீர்வுகளை வழங்குவதல் போன்ற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேனவினால் அதற்குரிய ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப்பெரும, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் வசந்த தேசப்பிரிய ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
1919 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச தகவல் மையத்துடன் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது இணையம், மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்கோ பொது மக்கள் தமது முறைப்பாடுகள், குறைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளதுடன், பெறப்படும் முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவினால் பரிசீலிக்கப்பட்டு உரிய முறைப்பாடுகள், குறைகள் என்பவற்றின் மேலதிக செயற்பாடுகளுக்காக உரிய அமைச்சிற்கு அல்லது நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.
மேற்குறித்த அனைத்து செயற்பாடுகளும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணனி தரவுத் தொகுதியின் ஊடாக வினைத்திறனான முறையில் செயற்படுத்தப்படும்.