கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 இம்மாதம் (ஆனி) 15 16 17ம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
போரும் போருக்குப் பின்னரான காலத்தும் தொட்டுணராப் பண்பாடு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றின் முக்கியத்துவமும் என்ற தலைப்பிலான 2017ம் ஆண்டுக்கான உலக ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 15 16 17ம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இராஜதுரை அரங்கில் நடைபெற இருக்கின்றது.
உணர்ந்தும் உணராமலும் அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக்கொண்டிருக்கின்றவற்றில் பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும் அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்று கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.
இம்மாதம் 15ம் திகதி மாலை 06.30 மணிக்கு தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இம் மாநாட்டில் 120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் 17ம் திகதி மாலை பறங்கியர் கலைவிழாவும் 18ம் திகதி கலைப்பண்பாட்டுக் களப்பயணமும் இடம்பெற இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
LDA_dmu_batti