சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வழிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சின் பனை அபிவிருத்திச் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் 13 லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இன்று (12) காலை மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இவ் உபகரணங்கள் மாவட்ட முகாமையாளர் ரி.விஜயனால் வழங்கிவைக்கப்பட்டன.
பனைசார் உப்பத்திகளை ஊக்குவித்தலும், உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதலும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் உற்பத்தியாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்களி( பனாட்டு) உற்பத்திக்கென மட்டக்களப்பு மாமாங்களம் பனை உற்பத்தியாளர் சங்கத்திற்கு 3 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், பனங்களி உற்பத்தி இயந்திரம், களி உலர்த்தும் தட்டு, காஸ் சிலின்ரருடனான காஸ் அடுப்பு, பத்து லீற்றர் கொள்கலன்கள் 10 அடங்கிய தொழில் உபகரணத் தொகுதி வழங்கப்பட்டது.
அத்துடன், பனங்கிழங்கு உற்பத்தியாளர்கள் 23 பேருக்கு பனங்கிழங்கு அவிக்கும் பாத்திரம், படங்கு அடங்கிய தலா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணத் தொகுதிகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை, மண்முனை மேற்கு, மண்முனை தென் எருவில் பற்று, ஏறாவூர் பற்று, மண்முனைப்பற்று, கோரளைப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இது போன்ற பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் இம்மாதம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட முகாமையாளர் ரி.விஜயன் தெரிவித்தார்.