சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழா இம்மாதம் 13ம் திகதி மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள வறிய, வீட்டு வசதிகளற்ற நூறு குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படுவதுடன், வீட்டு புனரமைப்புப் பணிகள் மற்றும் காணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வறிய சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் 500 புலமைபரிசில்கள் வழங்கப்படுவதுடன் மரணதண்டனை, ஆயுள்தண்டனை மற்றும் 20 வருட சிறைத்தண்டனை பெற்ற கைதிகளின் பிள்ளைகளுக்கே இப்புலமை பரிசில் உரித்துடையதாகிறது.
அத்துடன் தாய் அல்லது தந்தை சிறைத்தண்டனை பெற்றமையினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களுக்கான உதவி வழங்கப்படவுள்ளதுடன், சுகாதார, கற்கை மற்றும் ஆலோசனைக்கான நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது. சிறைதண்டனை நிறைவடையும் நிலையில் உள்ள ஆண் பெண் கைதிகளுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கான தொழிற்பயிற்சிகளை சிறைச்சாலையில் ஆரம்பித்தல், சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கான நிதியுதவி வழங்குதல், ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
சிறையில் உள்ள நீதிமன்ற அபராதத்தை செலுத்த முடியாத தெரிவு செய்யப்பட்ட கைதிகளுடைய நியாயமான கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்து மட்டுப்படுத்தப்பட்டளவு தண்டப்பணத்தை செலுத்தி விடுவிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சந்தேக நபர்கள் மற்றும் கைதிகளுக்கான சட்ட சேவைகளை வழங்குதல், கைதிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பங்களிப்பு வழங்குதல் என்பனவும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தின் உப தலைவர் லயனல் வீரசிங்க தெரிவித்தார்.
இன்று (09) காலை சிறைச்சாலைகள் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது நலன்புரிச் சங்கத்தின் உபதலைவர் எம்.டீ. சரத்சந்திர உட்பட பலர் கலந்துகொண்டனர்.