சுற்றாடலுடன் மிக நெருக்கமான பிணைப்புடன் வாழ்வதற்கு பௌத்தம் நல்கும் வழிகாட்டல் எமது நல்லிருப்புக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இரண்டாம் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் மிஹிந்தலையில் அன்று வேட்டையாடலைக் கைவிட்ட இடத்திலிருந்தே இந்த நாட்டின் புதிய நாகரீகம் ஆரம்பமானது. அங்கு போதனை பெற்ற மன்னனுடன் நமது நாடும் பஞ்ச சீலத்திற்கு அமைவாக தயை மற்றும் கருணையை முன்நிறுத்திய பயணத்தை ஆரம்பித்தது.
அன்று நாம் புதியதொரு சமயத்தின் உரிமையை மட்டுமன்றி , அக்காலத்தில் இருந்த பாரத மௌரிய அரசுகளின் நாகரீகம், கல்வி, இலக்கியம், கட்டிடக்கலை, கமத்தொழில் மற்றும் விழுமியம் நிறைந்த வாழ்வியலை அடையப்பெற்றோம்.
அந்த வகையில் எமது எதிர்காலத்தை உருவாக்கிய, வரலாற்றுத் திருப்புமுனையாகவே, பொசன் பௌர்ணமி மற்றும் மகிந்த தேரர் நம் நாட்டுக்கு வருகைத் தந்ததை நாம் கருத வேண்டும்.
அதனாலேயே மிஹிந்தலை புண்ணிய பூமி, எமது தேசத்தின் தாய்மடியாக வணங்கப்படுகிறது.
அவ்வாறு தோற்றம் பெற்ற எமது நாகரீகத்தை, விலங்குகளின் மதித்த இன்னா செய்யாமை கொள்கையுடன் பிணைந்துள்ளது. அதனாலேயே உலகின் முதலாவது விலங்குகள் சரணாலயம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அத்துடன் சுற்றாடலுடன் மிக நெருக்கமான பிணைப்புடன் வாழ்வதற்கு பௌத்தம் நல்கும் வழிகாட்டல் எமது நல்லிருப்புக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது. பௌத்த தர்மம் போதித்த சூழலுடனான பிணைப்பு முறிவடையும் போதே நாம் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. சுற்றாடலுக்கும் மனிதனுக்குமான பரஸ்பர உறவு முறிவடையும் போது ஏற்படும் இடர்களை, எல்லையற்ற தொழில்நுட்பங்களால், இயற்கைக்கெதிராக மனிதன் செய்யும் தீங்குகளின் எதிர்விளைவுகளே மனிதர்களுக்கு எதிரான தீய விளைவுகளாக உருமாரும் என தீக நிகாய அக்கஞ்ஞ சூத்திரம் எனும் பௌத்த போதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த உன்னதமான பொசன் பௌர்ணமி தினத்தில், மா மர நிழலில் தர்ம போதனைகளை செவிமடுப்பவர்கள் போன்று மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் ஒழுக்கத்தைப் பேணி, சுற்றாடலுக்கு நன்மை புரிந்து உலகை மிகச் சிறப்பானதாக மாற்றுவோம் என திடசங்கற்பம் பூணுவோம்.