அரச மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது என்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 147 மாணவர்களுக்குபுலமைபரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (07) இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரச பல்கலைக்கழகங்களுக்கு 2016ம் ஆண்டு க.பொ. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை இணைக்கும் வீதம் 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும் 80 வீதமான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். எனினும் இலவச கல்வியை பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்று வெளியேறும் மாணவர்கள் என்ன செய்கின்றனர் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு ஒரு பட்டதாரி இல்லை. அப்படியாயின் போராட்டங்களினூடாக இலவச கல்வியை பாதுகாக்க முடியாது. அவர்கள் பொது மக்களின் வரிப்பணத்தால் கற்றமையினால் இலவச கல்வியை பெறும் அனைவரும் இந்நாட்டில் உள்ள யாசகர்களுக்கும் கடன்பட்டுள்ளனர்.
புத்தக்கல்வியை விடவும் வேலை செயற்படக்கூடியவர்களே நாட்டுக்கு அவசியம். உலகின் வாழ்க்கைத் தரத்தை புதிய கண்களால் பார்க்கக்கூடியவர்களே தேவைப்படுகின்றனர். அதனால் உயர் கல்வியமைச்சர் லஷ்மன் கிரியெல்லவின் வழிகாட்டலில் அரச மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்துக்கு பொறுப்புக்கூறக்கூடிய சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இலங்கை தொழிற்கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டாவிட்டாலும் நாடு என்ற ரீதியில் முன்னேறி செல்வதற்கு தொழிற்கல்வியில் அபிவிருத்தி அவசியம். அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் உயர் கல்வியின் பின்னர் தொழிற்கல்வியில் இணைகின்றனர். இலங்கை போன்றே உலக நாடுகளில் தொழிற்கல்விக்கே சிறந்த வரவேற்புள்ளது. தொழில்நுட்பத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய பிள்ளைகள் தொழில்நுட்பத்தையும் சமூக ஊடகத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால் நாடு இதனை விடவும் முன்னேறும். சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் போன்று உயர்கல்வி தகைமைகளுக்கான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.