அரசியல்வாதிகள் அபிவிருத்திக்கு பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டச் செயலகத்தில் நேற்று (01) நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முயற்சி எடுத்த போதிலும் சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக அந்த செயற்பாடுகள் தடைப்பட்டன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடக நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக உதவித் திட்டங்களை அமுல்படுத்துமாறும் மக்கள் அதிக நாட்கள் முகாம்களில் தங்கியிருக்க முடியாது என்பதனால் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும், உதவிச் செயற்பாடுகளின் முன்னுரிமையை இனங்கண்டு செயற்படுமாறும் அலுவலர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
வெள்ளம் வடிந்த பின்னர் கிணறுகளை துப்பரவு செய்வதற்கான நீர்ப்பம்பிகளை அரசாங்கத்தால் வழங்குமாறும், மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக இலவசமாக வழங்குமாறும், மக்களுக்குத் தேவையான உலர் உணவு உள்ளிட்ட பொருட்களை பகிர்ந்தளிக்கும் போது அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ளாமல், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அலுவலர்கள் ஊடாக அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
மாவட்ட வீதிகள், பாடசாலை மற்றும் மருத்துவமனைகளில் விரைவாக மேற்கொள்ளக்கூடிய திருத்த வேலைகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கும் செயற்பாடுகளை முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறும் அவர் கூறினார்.
அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, நிஷாந்த முத்துஹெட்டிகம, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், காலி மாவட்ட செயலாளர் எஸ்.டி.கொடிகார உள்ளிட்ட அரச அலுவலர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
முன்னதாக அனர்த்த நிவாரண சேவை அலுவலர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டினார்.
அதன்பின்னர் காலி மாவட்ட மக்களுக்காக ஏனைய மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக காலி மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதி ஒப்படைத்தார்.
பாதிக்கப்பட்ட தமது சகோதர மக்களுக்காக பொலன்னறுவை, அனுராதபுரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மன்னார், மொனராகலை, குருணாகல், புத்தளம், மாத்தளை, கண்டி, கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றியதற்காக ஜனாதிபதி அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.