ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கமைய மூன்று மாத டெங்கு ஒழிப்புத் திட்டம் இன்று (01) ஆரம்பமாகிறது.
டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி, சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு ஆகியவை இணைந்து இம்மூன்று மாத டெங்கு ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்துகின்றன.
2017ம் ஆண்டின் கடந்த காலப்பகுதியில் மட்டும 53,000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மூன்று மாத காலப்பகுதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு மணிநேரம் தமது அலுவலக சுற்றாடலை துப்புறவு செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடசாலை சூழலை துப்புறவு செய்ய வேண்டும். அத்துடன் அப்பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும்.
அனர்த்ததினால் பாதிக்கப்படாத 7 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கவும் வெள்ள நீர் வடிந்த பின்னர் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால் அப்பிரதேசங்களில் டெங்கு நோயொழிப்புப் பணிகள் ஆரம்பிப்பதற்கும் சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.