வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் வழங்குமாறும் பால் மா வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் குடும்பநல காரியாலய விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹிரணி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இன்று (31) கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நிவாரணப் பொருட்கள் வழங்கும் போது பிள்ளைகளுக்கான பால்மாக்களை வழங்குவதை முடிந்ததளவு தவிர்த்துக்கொள்ளுங்கள். முடிந்தளவு தாய்ப்பாலையே கொடுங்கள். அவ்வாறு பால்மா வகைகளை வழங்குவது பிள்ளைகளுக்கு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வெள்ள அனர்த்தம் காரணமாக சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதில் பிரச்சினை உள்ளது. சூழலும் அசுத்தமாகியுள்ளது. இந்நிலையில் பால் மா பாவனை அதிக சுகாதார பிரச்சினையை ஏற்படுத்தும்.
தாய்பால் பாதுகாப்பான முழு உணவு என்பதால் அதனை பிள்ளைகளுக்கு வழங்குவது அவசியம். தாயை இழந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கு அவசியமான பாதுகாப்பான உணவை சுகதார குழுவினரினூடாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.