சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்குமாறு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன் ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
சி.பீ.எஸ்.டி.எல் நிறுவனத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாலோசனையை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எரிபொருள் தடையின்றி வழங்கப்படுகிறதா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இக்கலந்துரையாடலின் போது வலஸ்முல்ல, மித்தேனிய, மாத்தறை, கிரம, ஹக்மன, அகுணுகொலபெலஸ்ஸ, அம்பலங்கொட, காலி, ருவன்வெல்ல, ஹொரண, கித்துல்கம, தெரணியகல, தலங்கம மற்றும் கொலொன்னாவ ஆகிய பிரதேசங்களில் எரிபொருள் தடைப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
குறித்த பிரதேசங்களுக்கு இன்று (29) நன்பகலுக்குள் எரிபொருள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.எஸ்,டி.எல் நிறுவனத்தில் விநியோகித்தல் பிரிவு முகாமையாளர் டப்ளியு.எம்.டி. டப்ளியு ஏ. பண்டார தெரிவித்துள்ளார்.
முப்படையினர்களின் கேட்டிருந்த அளவு எரிபொருள் உரிய நேரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இனியேற்படும் மோசமான நிலைமை குறித்து இன்றே ஆராய்ந்து அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு தயார் நிலையில் இருக்காவிட்டால் எரிபொருள் வழங்கல் விரயமாகிவிடும். தற்போது சில எரிபொருள் விற்பனை நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சிலவற்றுக்கு செல்லவே முடியாத நிலை காணப்படுகிறது. எது எவ்வாறிருப்பினும் மாற்று வழிமுறைகளை கண்டறிந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.