கிங் கங்கையின் இரு புறத்திலும் வசிக்கும் மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் அதன் கரைகள் உடைப்பெடுக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் காலி, மாத்தறை மாவட்ட வடிகாலமைப்பு பணிப்பாளர் திருமதி தீபிக்கா திரிமாவிதான எச்சரித்துள்ளார்.
இன்று காலை (28) மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்திருந்த அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது பத்கேகம பிரதேசத்தில் பாதுகாப்பு அணையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவ்விடத்தில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இராணுவத்தினர் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வக்வெல்ல நீர் வழங்கல் நிலையத்தில் உள்ள இரு நீர் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத்தில் 3 அடியில் மட்டும் சிறு துவாரம் உள்ளதாகவும் மேலும் நீர் மட்டம் அதிகரிக்குமாயிருந்தால் மேலும் இரு குழாய்கள் அகற்றவேண்டியேற்படலாம் என்றும் விரதேச பொறியிலாளர் எம். கே. லெஸ்ட் தெரிவித்தார். அவ்வாறு குழாய்கள் அகற்றப்பட்டால் ரத்கம, போபே, அக்மீமமன, அஹங்கம, ஹபராதுவ, ஆகிய பிரதேசங்களில் நீர் வழங்கல் தடைப்படும் என்றும் அப்பிரதேச மக்கள் முடிந்தளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை வரை காலி மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆகும்.
337 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 28270 குடும்பங்களைச் சேர்ந்து 114161 பேர் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வவசர கலந்துரையாடல உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்தன, பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.