களுத்துறை, பனாபிட்டிய அணையில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் களுத்துறை, பாணந்துரை பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் அனர்த்த நிவாரண அமைப்புக்களில் இருந்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பனாபிட்டிய அணையைச் சுற்றி பாதுகாப்பு மதில்கள் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் மிக அவதானத்துடன் இருப்பது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நில்வலா கங்கை, கிங் கங்கை என்பவற்றில் நீர்மட்டம் குறைவடைந்துள்ள போதிலும் அபாய நிலை குறைவடையவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு இடப்பட்ட பாதுகாப்பு சுவர்கள் உடைக்கப்பட்டு மாத்தறை ஆற்று நீர் வடிவதற்கு ஏதுவாக நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தவறாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இப்பாதுகாப்பு சுவர்களினால் பல பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கிங்கங்கை மற்றும் நில்வலா கங்கை திட்டத்தின் கீழ் இப்பாதுகாப்புச் சுவர்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மண்ணை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால் இரு ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வௌியேறினால் சுவர்கள் உடையும் சாத்தியம் காணப்படுவதாக வடிகாலமைப்புத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நில்வலா கங்கையின் சுவர்களின் மேலாக தற்போதும் தண்ணீர் வௌியேறிய வண்ணம் உள்ளதாகவும் சுவர்கள் நீர் கசிவு காணப்படுவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்விடங்களில் மண் நிரப்பிய சாக்குகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு அரண் உருவாக்குவதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காலி, மாத்தறை மாவட்டங்களின் வடிகாலமைப்பு பணிப்பாளர் பொறியிலாளர் தீபிக்கா திரமஹவிதான கருத்து தெரிவிக்கையில் நீர் மட்டம் குறைவடைந்தாலும் தொடர்ந்து நீரிருப்பின் பாதுகாப்புச் சுவர்கள் உடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
எனவே, பாதுகாப்பு அரண் உள்ள பகுதிகளை விட்டு தொலைவில் பாதுகாப்பாக இருக்குமாறு அப்பிரதேசவாசிகளிடம் கோரப்பட்டுள்ளது.