சுற்று நிரூபங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் இன்று (27) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில், உயிரிழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்குதல், இடம்பெயர்ந்து மற்றும் அன்றாட தொழில்களை இழந்துள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான ஒரு முறைமை குறித்து தொடர்புடைய நிறுவனங்களுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் அவ்வப்போது ஏற்படும் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சர்களான வஜிர அபேவர்தன, ராஜித சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, அஜித் பி. பெரேரா மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, மாகாணசபை அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு