பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக 45 மில்லியன் ரூபா நிதி பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துனேஷ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்பில் இந்நிதியொதுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமரின் பங்களிப்புடடன் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் உதவியை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை தொடர்பான விசேட ஊடகவியிலாளர் சந்திப்பொன்று நேற்று (26) அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இந்த அவசரகால நிலைமையை சமாளிப்பதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதுடன் செல்ல முடியாத பிரதேசங்களில் உள்ள மக்களை மீட்டுக்கொள்வதற்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முப்படை ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். மீட்புப் பணிகளில் இராணுவத்தின் 2ம் படையணி மற்றும் கடற்படை படையணிகள் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கடந்த 24 மணி நேரத்திற்குள் அதிகமான மழை வீழ்ச்சி குக்குலேகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இப்பிரதேசத்தில் 553 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆர் ஜயசேக்கர தெரிவித்துள்ளார். எதிர்வரும் தினங்களில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வவசரகால நிலைமை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். எனவே அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரசேதங்களில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர் கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்கு மக்கள் கூடுவதனால் நிவாரணம் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதனால் அப்பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு தௌிவுபடுத்துவ ஊடகங்களின் கடமையென்று கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாராத்ன பரணவிதான, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ். எஸ். மியனவல, கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாரத்ன, வடிகாலமைப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். துரைசிங்கம், அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பணிப்பாளர் (நிறைவேற்றல்) ரியல் அட்மிரல் எ.எ.பீ லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர்.