சீரற்ற காலநிலை நாட்டில் தொடர்வதால் வானிலை அவதான நிலையம் விடுக்கும் அறிவுறுத்தல்களை கவனமாக செவிமடுத்து செயற்படுமாறு மிக அவதானத்துடன் செயற்படுமாறு மீன்பிடித்துறை அமைச்சு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மோசமான வானிலை தொடர்பில் அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தல்களை உடனடியாக வழங்குமாறும் அனைத்து மீன்பிடித்துறைமுக தொழில்நுட்பவியலாளர்களுக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காற்றுடன் கூடிய காலநிலையினால் ஏராவூரில் கடலுக்குச் சென்ற 19 மீன் பிடிப்படகுகள் காணாமல் போயுள்ளதாக வௌியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து சென்ற இரு படகுகளைத் தவிர ஏனைய அனைத்தும் மீண்டும் துறைமுகத்திற்கு திரும்பியுள்ளதாகவும் காணாமல் போன படகிலிருந்த மீனவர்களும் ஏனைய மீனவர்களுடன் பாதுகாப்பாக கரையை வந்தடைந்துள்ளனர் என்றும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வௌியானதையடுத்து உடனடியாக செயற்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேவையேற்படின் உடனடியாக தன்னை தொடர்புகொள்ளுமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.
இது இவ்வாறிருக்க குறித்த விடயம் தொடர்பில் தகவல் வௌியானவுடன் உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் மீனவர்களை பாதுகாப்பதற்கும் காணாமல் போன படகுகளை கண்டுபிடிப்பதற்கு இரு டோரா படகுகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு அமைச்சர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
மீன்பிடித்துறை அமைச்சின் இணையதளம்