தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தாழ் நில பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றமையினால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்கராஜய, நெளும்வல, ஹினிதும, மொரவகல, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக நில்வலா கங்கை, கிங் கங்கை, பொல்அத்துமோதர, பெந்தர, மாதுரு ஓயா, களுகங்கை மற்றும் களனி கங்கை என்பனவற்றில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக வடிகாலமைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீட்பதற்கான விசேட திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விமானபடையினர் தற்போது நான்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் கண்காணிப்பு விமானம் என்பனவற்றை பயன்படுத்தி மீட்புப்பணிகளில் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை கடற்படையினரது 21 டிங்கி படகுகளும் 85 படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 இராணுவ வீரர்களும் ஆறு தாங்கிகளுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பகல் 12.00 மணியளவில் தெனியாய பிட்டபெத்த, மொரவக்கல, நெளுவ மற்றும் தவலம ஆகிய பிரதேசங்களில் மழை ஓய்ந்துள்ள போதும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, மில்லகந்த ஆகிய பகுதிகளில் விடாது மழை பெய்து வருவதாகவும் எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் 150 மில்லி லீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணம் என்பவற்றில் இடியுடன் கூடிய கடும் மழை ஏற்படக்கூடும் என்றும் கரையோர பிரதேசங்களில் மணிக்கு 60-70 மீற்றர் வரை காற்று வீசக்கூடும் என்றும் அலைகள் வேகமாக வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிங்கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை, களனி கங்கை மற்றும் பெந்தர கங்கை ஆகிவற்றின் மேட்டுப் பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளபோதிலும் நேற்று (25) பெய்த கடும்மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தாழ் நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதால் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, உடகமல, எல்பிட்டிய, ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் வடிகாலமைப்புச் சபை எச்சரித்துள்ளது. எனவே குறித்த இடங்களிலிருந்த பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதனால் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 24 மணி நேரத்திற்கும் தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது. கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் அபாய நிலை காணப்படுவதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.