தற்போது ஆரம்பித்துள்ள மழை காலநிலை நாட்டில் பலவிடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்வதுடன் கடுமையான காற்று வீசும் சாத்தியங்கள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஒரு 21 மணித்தியாலங்களுக்குள் தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் கடுமையான மழை பதிவாகியுள்ளது. இரத்தினபுரி வானிலைய அவதானிப்பு மத்தியநிலையத்தில் 196.7 மில்லி லீற்றர் மழை பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மழை வீழ்ச்சி காணப்படுகிறது.
அதேபோல், மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணம், தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏனைய மாகாணங்களில் குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் நாட்டில் ஆங்காங்கே மணிக்கு ஐம்பது கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் மின்னலினால் ஏற்படும் தாக்கத்தையும் சேதங்களையும் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.