இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்த தெரிவித்தார்.
சுவீட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றுவரும் உலக சுகாதார அமைப்பின் 70வது அமர்வின் நிமித்தம் நடைபெற்ற மலேரியா ஒழித்தல் தொடர்பான நிகழ்வில் நேற்று (23) கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஆசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்ட நாடுகள் என்ற சான்றிதலை இலங்கையும் மாலைதீவும் பெற்றுக்கொண்டுள்ளன. அதற்கான ஒத்துழைப்பை நல்கிய உலக சுகாதார அமைப்பு மற்றும் ஏனைய அமைப்புக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியர் ராஜித்த சேனாரத்ன தலைமையிலான இலங்கை குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "இலங்கையில் மலேரியாவை முற்றாக ஒழிக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மலேரியாவை ஒழிப்பது என்பது மிகவும் கடுமையான விடயம். ஐம்பது வருடங்கள் அதற்காக பாடுபட்டோம். 1935ம் ஆண்டு இலங்கையில் 1.5 மில்லியன் மலேரியா நோயாளிகள் பதிவாகியிருந்தனர். 1963ம் ஆண்டளவில் வெறும் 17 நோயளர்கள் மட்டுமே பதிவாகினர். மலேரியா நோயை ஒழிப்பதற்கான பொறிமுறையொன்றை செயற்படுத்தியதுடன் 2012ம் ஆண்டளவில் இலங்கையில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்க இயலுமானது. மீண்டும் அந்நோய் தலைதூக்காதிருக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இலங்கையில் மலேரியா நோயை முற்றாக ஒழிக்க ஒத்துழைப்பு வழங்கிய உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் மாக்ரட் வேன், தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பூனம் செத்ரபால் சிங்க ஆகியோருக்கு நினைவுச்சின்னங்களையும் சுகாதார அமைச்சர் வழங்கி கௌரவித்தார்.