இலங்கை கல்விச்சான்றிதழுக்கு சர்வதேச ரீதியாக உள்ள மதிப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கமைய புலம்பெயர் இலங்கையர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து வெளிவிவகார அமைச்சு வழங்கும் பரீட்சை சான்றிதழ்களுக்கு மேலதிகமாக அச்சான்றிதழ்களின் பிரதிகளை உரிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்புவதற்கும் இதனூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கையர்கள் போலிச்சான்றிதழ்களை சமர்ப்பித்து மோசடிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் சர்வதேச ரீதியாக இலங்கையின் பரீட்சை சான்றிதழ்கள் தொடர்பில் உள்ள மதிப்பை பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்.
இலங்கை பரீட்சை தொடர்பில் உலகில் அனைத்து நாடுகளிலும் சிறந்த வரவேற்பு உள்ளது. உலகில் அவ்வாறான மதிப்பு மிக்க சான்றிதழ்களை கொண்ட நாடுகள் சிலவே உள்ளன. இலங்கை அந்நாடுகளில் ஒன்றாக இலங்கையும் உள்ளமை நாட்டின் பரீட்சை முறைக்குள்ள பெருமதிப்பாகும். எனினும் சிலர் சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை போலியாக சமர்ப்பித்து வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். சிலர் உயர்கல்விக்காகவும் அச்சான்றிதழ்களை சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறான செயல்களினால் பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழுக்குள்ள சர்வதேச மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. எனவே மேற்குறிப்பிட்ட திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் பரீட்சை ஆணையாளர் நாயகம் உட்பட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அண்மையில் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற திட்ட முன்னேற்ற கூட்டத்தின்போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.