உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பை நினைவுகூறும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாளை (23) அவுஸ்திரேலியா பயணமாகிறார்.
இதற்கு முன்னர் 1954 ஆம் ஆண்டு முன்னால் பிரதமரான ஜோன் கொத்தலாவல அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
(அப்போது இலங்கையின் அரச தலைவராக இருந்தவர் பிரித்தானியாவின் இராணி என்பதால் ஜோன் கொத்தலாவலவுக்கு அரச விஜயத்திற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதுடன், அவ்விஜயம் ஒரு உத்தியோகபூர்வ விஜயமாகவே கருதப்படுகிறது. அந்தவகையில் சுதந்திர இலங்கையின் எந்தவொரு அரச தலைவருக்கும் இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து அரச விஜயத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் முதலாவது அழைப்பு என்றவகையில் ஜனாதிபதிக்கு இவ்விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.)
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஏழு தசாப்தகால உறவுகள் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த காலத்தில் பெரும்பாலான சர்வதேச மன்றங்களில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருந்து வருகிறது. கடற் பயணங்கள் மட்டுமன்றி மனிதக் கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் இதில் அடங்கும். சமுத்திர பாதுகாப்பு மற்றும் மனிதக் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அண்மையில் வெளியிடப்பட்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் விவசாயம், பண்ணை உற்பத்திகள், கல்வி மற்றும் விளையாட்டு போன்ற துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதுடன், இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் செய்துகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளிலும் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய முதலீடுகளை நாட்டுக்கு கொண்டுவருதல் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தல் என்பன ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின் போது முக்கிய கவனத்தைப்பெறும். அந்த வகையில் ஜனாதிபதி அவர்களின் இவ் விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
நாட்டின் விவசாய அபிவிருத்தி குறித்து முக்கிய கவனம்செலுத்தி வரும் ஜனாதிபதி, இந்த விஜயத்தின்போது அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொதுநலவாய அமைப்பின் அனுசரணையில் தாபிக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் ஆய்வுக்கூடத்தையும் பார்வையிடவுள்ளார்.
சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் நாட்டின் வனப் பரவலை அதிகரிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள ஜனாதிபதி , அது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் அனுபவங்களை அறிந்துகொள்வதற்காக கென்பராவில் உள்ள பிரபல தாவரப் பூங்காவையும் பார்வையிடவுள்ளார்.