காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவிததுள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்
மேலும், 2015 ஆண்டில் தான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ மாணவியருடன் தோன்றும் புகைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட்டு தன்னுடன் இருந்த இந்த பிள்ளை காணாமல் போயுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் பிற்போக்குவாதிகளின் அரசியல் சதியாகுமெனவும் அவ்வாறான காணாமல் போதல் இடம்பெற்றிருந்தால் அந்த பிள்ளைகளை தேடுவதற்காக நானும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவேன்.
அத்துடன் கடந்த 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவிருந்த போதும் தன்னை வர விட முடியாதென வடக்கில் எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தையும் நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள்> அன்றைய தினம் தான் அவ்வாறு விஜயம் மேற்கொள்வதாக இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பெற்ற சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் பெறுமதியை புரிந்துகொண்டு அனைவரும் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி பெற்ற சமாதானத்தை மக்களை தவறாக வழிநடத்தி சீர்குலைக்க முன்னெடுக்கப்படும் பிற்போக்குவாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தான் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தெற்கைப் போன்றே வடக்கிலும் அபிவிருத்தியை தான் தாமதப்படுத்தவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, நவரத்தினபுரம், கூனித்தீவு, கடற்கரைச்சேனை ஆகிய ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 4253 மக்களுக்கு சேவையாற்றுவதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சம்பூர் மாவட்ட மருத்துவமனை இன்று (20) முற்பகல் ஜனாதிபதியினால் மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.
56 மில்லியன் ருபா செலவில் அனைத்து வசதிகளுடனும் இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நினைவு படிகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.
மருத்துவனையில் முதலாவதாக அனுமதிக்கப்பட்ட நோயாளியையும் ஜனாதிபதி பதிவு செய்தார்.
அத்துடன் லங்காபட்டுன விகாரைக்கு செல்வதற்காக லங்காபட்டுன களப்பு ஊடாக நிர்மாணிக்கப்பட்ட பாலத்தையும் இன்று முற்பகல் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
150 மீற்றர் நீளமான பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பாலத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி லங்காபட்டுன விகாரையின் விகாராதிபதியை தரிசித்து நலன் விசாரித்தார்.
பாலத்தை திறப்பதற்கு முன்னதாக பாலத்துக்கு அருகிலுள்ள புராதன கண்ணகி அம்மன் கோவிலில் வழிபட்டு> ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பண்பாட்டு மண்டபத்தையும் ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு உரித்தாக்கினார்.
போரில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சம்பூர் பிரதேச மக்களுக்கான நிரந்தர வீடுகள், சுகாதாரம், குடிநீர், உள்ளக வீதிகள், மின்சாரம், பாடசாலைகள் மற்றும் ஏனைய உட்கட்மைப்பு வசதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன.
சம்பூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்> அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல> பைசர் முஸ்தபா> ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா> கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ> முதலமைச்சர் நசீர் அகமட்> திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹறூப்> மாகாண அமைச்சர்களான எஸ்.தண்டாயுதபாணி> ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.