நாடு பூராவும் தரை மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் இலவச அம்புயூலன்ஸ் சேவையினை வழங்க முதலீடு செய்வதற்கு உலக பிரசித்தி பெற்ற ஜெர்மனின் பென்ஸ் நிறுவனம் மற்றும் எயார் பஸ் நிறுவனம் ஆகியன முன்வந்துள்ளன.
ஜெர்மனிக்குக்கு விஜயம் செய்துள்ள சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறித்த நிறுவனங்கள், அரச பொருளாதார அலுவல்களுக்கான நிதியுதவி வழங்கும் வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் அந்நாட்டு அரச அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசர கால நிலைமைகளின் போது நோயாளிகளை சிகிச்சைக்காக கொண்டு செல்வதற்கு எயார் பஸ் நிறுவனம் 24 ஹெலிகொப்டர்களுக்கு முதலீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலவச அம்பயூலன்ஸ் சேவைக்காக 1050 அம்யூலன்ஸ்களையும் அனர்த்த வேளையின் பயன்படுத்தப்படும் 240 வாகனங்களை வழங்குவதற்கு பென்ஸ் நிறுவனமும் இணக்கம் தெரிவித்துள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் ஏற்கனவே செயற்படுத்தப்படும் அம்யூலன்ஸ் சேவையினூடாக மக்களுக்கு பாரிய சேவையாற்றப்படும் நிலையில் மற்றுமொரு சேவையை இலவசமாக செயற்படுத்த ஜெர்மனி முன்வந்துள்ளமை பாராட்டக்கூடிய விடயம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.