சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தைச்
சேர்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பி.குணரெட்னம், தெரிவித்தார்.
விண்ணப்பதாரிகளானவர்கள், சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுக்காக சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதிய அங்கத்தவராக இருத்தல் வேண்டும், 2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவராக இருக்க வேண்டும்.
வேறு புலமைப்பரிசில் பெற்றுக்கொள்ளாதவராக இருக்க வேண்டும் என்பதுடன், உரிய பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்.
இதற்குரிய விண்ணப்பப்படிவங்களை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் அல்லது பிரதேச செயலகங்களிலுள்ள சமுர்த்தி சமூகக் காப்புரித்து உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னராக பிரதேச செயலங்களிலுள்ள சமுர்த்தி சமூகக் காப்புரித்து உத்தியோகத்தர்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பப்படிவங்களுடன் விண்ணப்பதாரிகளின்; தேசிய அடையாள அட்டைப் பிரதி, தந்தை அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டைப் பிரதி, 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ் பிரதி மற்றும் வேறு எந்த புலமைப்பரிசில் கொடுப்பனவும் பெறவில்லை என்ற உறுதிப்படுத்தல் கடிதம் ஆகியனவும் இணைக்கப்பட வேண்டும்.
தலா மாணவருக்கு மாதமொன்றுக்கு 1,500 ரூபாயாக இரண்டு வருடங்களுக்கு இந்தப் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
LDA_dmu_batti