மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமாகிய மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடைகளுக்கான குளம் ஒன்றினை அமைப்பதற்கு (புனர் நிர்மானம்) செய்வதற்கு உகந்த இடத்தினைப் பார்வையிடுவதற்காக இன்று (17) அமைச்சர் அவ்விடத்திற்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் போது அமைச்சர் அவர்களுடன் கமநல சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் சிவலிங்கம் அவர்களும் அப்பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு அப்பிரதேசத்தினைப் பார்வையிட்டதுடன் குளம் அமைப்பதற்கு உகந்ததாக இருக்கும் இடங்கள் சிலவற்றையும் பார்வையிட்டனர்.
அது மட்டுமல்லாது அதற்கான சாதக பாதக நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன். இறுதியில் மயிலத்தமடு பிரதேச கால்நடைகளுக்காக ஒரு குளத்தினை அமைப்பதற்கு (புனர் நிர்மானம்) செய்வதற்கு உரிய இடம் தெரிவு செய்யப்பட்டு அங்கு சிறிய குளம் ஒன்றினை அமைத்துத் தருவதற்கு கமநல அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் இணக்கம் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் மேய்க்கப்படும் கால்நடைகளுக்கு நீர் வசதியில்லாமல் கால்நடைகளை பராமரிப்பதில் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் அவதியுற்ற நிலையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் மேற்படி செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டமையையிட்டு கால்நடை வளர்ப்பாளர்கள் மகிழ்வுற்றதுடன் அவருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.
இது போன்றே கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் நடவடிக்கைகள் காரணமாக மயிலத்தமடு பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நீண்ட காலமாக பாரிய பிரச்சினையாக இருந்த அத்துமீறிய பயிற்செய்கையாளர்களால் கால்நடைகள் கொலை செய்யப்படுதல் மற்றும் அத்துமீறிய செயற்பாடுகள் போன்றன தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது ஒரு சுமுக நிலையும் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.