கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடைவதன் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பேண்தகு அபிவிருத்தி மற்றும் பேண்தகு சமாதானத்தின் குறிக்கோள்களை அடைவதனூடாக சர்வதேச
பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (14) பிற்பகல் கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பௌத்த கோட்பாடுகளின் ஊடாக பிரச்சினைகளுக்கும், வறுமைக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த செயற்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவற்கு நான் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிறைவு நிகழ்வில் பௌத்த கோட்பாடுகளின் மேம்பாட்டிற்காகவும், உலகில் காணப்படும் பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் மூலமாக வழங்கக்கூடிய தீர்வுகளை செயற்படுத்துவதற்கும் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட வேண்டிய திட்டங்கள் அடங்கிய பிரேரணையாகிய கண்டி பிரகடனமும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
உலகில் பெளத்த சமயத்தை பின்பற்றும் சுமார் 72 நாடுகளை சேர்ந்த விசேட பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்களை ஒன்றிணைத்து பௌத்த அமைப்பொன்றினை உருவாக்குவதற்கு தாமதமின்றி செயற்படல், ஆன்மீக கட்டமைப்புக்களையும் மீறி மானிட சமுதாயத்தில் உருவாகியுள்ள சிக்கல் நிலைகள், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் அழிவுகளிலிருந்து அனைத்து உயிரினங்களையும் சூழலையும் பாதுகாத்தல், இளம் தலைமுறையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் போக்கினை கருத்திற்கொண்டு அதிலுள்ள ஆபத்துக்கள் மற்றும் விளைவுகள் பற்றி அவர்களைத் தெளிவூட்டுவதன் மூலம் அவர்களது எதிர்காலத்தை பாதுகாத்தல், மனிதர்களிடம் காணப்படவேண்டிய விழுமியப் பண்புகள், ஆத்மீக பண்புகள் அருகி வருவதனால் மீண்டும் அவ்வாறான உயர்ந்த பண்புகளையுடைய தார்மீக வாழ்கையை வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்கக்கூடிய ஊடக வலையமைப்பின் ஊடாக பௌத்த கோட்பாடுகளை பிரபலப்படுத்தல், உலகில் நீண்ட காலமாக நிலவிவரும் சமயங்களுக்கிடையிலான சகவாழ்வினை பேணிச்செல்வதற்கான பொறுப்புக்களை நிறைவேற்றல் உள்ளிட்ட 09 விடயங்கள் இந்த கண்டி பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி அவர்களும் நிறைவு விழாவில் உரையாற்றினார்.
வருகையை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாள ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கி கௌரவித்தார்.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மூன்று நிக்காயக்களைச் சேர்ந்த மகா சங்கத்தினரும், சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்தொகையான அதிதிகளும், பெளத்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த நிறைவு விழாவில் பங்குபற்றினர்.