ஐக்கிய நாடுகள் 14வது சர்வதேச விசாக தின கொண்டாட்டம் இந்திய பிரதமர நரேந்திர மோடி தலைமையில் இன்று (12) காலை 9.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
சமூக நீதி மற்றும் நிலையான அமைதிக்கான பௌத்தத்தின் படிப்பினை என்ற தொனிப்பொருளில் ஐநா விசாக தின விழா இலங்கையில் முதன் முறையாக இம்முறை கொண்டாடப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கமைய இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
சமத்துவமும், நியாயமும் கொண்டவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக இருளை அகற்றி ஒளியை ஏற்றுதலே இந்த சர்வதேச வெசாக் தினத்தைக் கொண்டாடும் அனைவரினதும் குறிக்கோளாக இருக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் மிக நெருங்கிய உறவு பெளத்த மதமாகுமென தெரிவித்த இந்திய பிரதமர், இந்திய அரசாங்கத்தினதும், சமூகத்தினதும் இன்றியமையாதவொரு ஒரு பாகமாக பௌத்த சமயம் காணப்படுவதுடன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அது தூண்டுகோலாக அமைகிறது என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறும் இந்த உன்னதமான வெசாக் கொண்டாட்டத்திற்கு தம்மை அழைத்தது குறித்தும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.
வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, பௌத்த கோட்பாடுகளின் செய்திகளை உலகிற்கு வழங்குவதனூடாக இன்று உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், சமூகத்தை அமைதிப்படுத்தி மனிதர்களை நல்வழிப்படுத்தவும் பாரிய பங்களிப்பு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
தேசிய, சர்வதேச ரீதியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வுகள் தேரவாத பௌத்த கோட்பாடுகளுக்குள் புதைந்து காணப்படுகின்றது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்திய பிரதமரிக் வருகையை நினைவுகூரும் முகமாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்திய பிரதமருக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கி கௌரவித்தார்
இக்கொண்டாட்டத்தில், அஸ்கிரி, மல்வத்து பிரிவுகளின் மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரும், உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளை சேர்ந்த தேரர்களும், பேராயர் வண. மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட சர்வ மத தலைவர்களும், சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், பெருந்தொகையான உள்நாட்டு வெளிநாட்டு விசேட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.