மலையக மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்தியா அனைத்து பங்களிப்புகளையும் வழங்கும் என பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, இ.தொ.கா உட்பட மலையகத்தின் பிரதான கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த பிரமாண்டமான பொதுக்கூட்டம் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் இன்று (12) நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்திய பிரதமர் இதனை தெரிவித்தார்.
மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்காயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படுவதுடன், மேல் மாகாணத்திலும் தென்மாகாணத்திலும் நடைமுறையிலுள்ள '1990' இலக்க அம்பியூலன்ஸ் அவசர சேவையை ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த காலங்களை போன்றே எதிர்காலத்திலும் இலங்கையுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்தார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்கள், இருநாடுகளினதும் இராஜதந்திரிகள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் மலையகத்தின் சகல பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்