சர்வதேச வெசக் உற்சவ விழாவில் கலந்துகொள்வதற்காக நாளை (11) இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையினால் கொழும்பில் விசேட போக்குவரத்து நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை (11) மாலை 6.00 பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இந்திய பிரதமர் வந்தடையவுள்ளார். காலை 6.15 மணிக்கு கட்டுநாயக்க அதிவேக பாதை, பேலியகொட, பேஸ்லைன் வீதியூடாக பொரளை, டி.எஸ் வீதி சமிக்ஞை சந்தி, கிறீன் பார்க், தாமரைத்தடாகம் நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, ப்ளவர் ரோட், பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் கங்காராம வரையிலும் போக்கு வரத்து மட்டுப்படுத்தப்படும்.
தொடர்ந்து காலை 7.15 மணிக்கு கங்காரமாவில் இருந்து நவம் மாவத்தை, உத்தராநந்த மாவத்தை, யானை குளிக்கும் சுற்றுவட்டம், மொஹமட் மாகன் மாகர் மாவத்தை, காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தினூடாக இந்திய பிரதமர் தாஜ் சமுத்திரா ஹோட்டலை சென்றடைவதனால் மேலே குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
காலை 8.20 மணிக்கு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்து காலி முகத்திடலினூடாக ஜனாதிபதி மாளிகையை இந்திய பிரதமர் சென்றடையவுள்ளார்.
காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்தைக் கடந்து காலி முகத்திடலினூடாக மீண்டும் தாஜ் சமுத்திரா ஹோட்டலை சென்றடைவார். இதன் போது குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
நாளை மறுநாள் (12) காலை 9.05 மணிக்கு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுபிட்டி சந்தி, லிபர்டி சந்தி, பித்தள சந்தி, நூலக சுற்றுவட்டம், க்ளாஸ் ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டர்ஸ், சுதந்திர சதுக்க சுற்றுவட்டம், சுதந்திர சதுக்கம், பௌத்தலோக்க மாவத்தை, மேட்லண்ட் இடம் ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை இந்திய பிரதமர் வந்தடைவார்.
காலை 10.50 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை, ஜாவத்தை சந்தியினூடாக இடது பக்கம் திரும்பி ஜாவத்தை வீதி, கெப்படிபொல சந்தியினூடாக வலது பக்கம் திரும்பி கெப்படிபொல மாவத்தையினூடாக பொலிஸ் பார்க் ஊடாக இந்திய பிரதமர் செல்லவுள்ளார்.
குறிப்பிடப்பட்ட நேரங்களில் போக்குவரத்து முற்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை காலை இந்திய பிரதமர் வரவுள்ளமையினால் அவர் பயணிக்கும் அதிவேக பாதையின் களனி நுழைவாயிலில் காலை 5.45 மணி தொடக்கம் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பேலியகொட நோக்கி செல்லும் வாகனங்கள் எந்தவித தடையுமின்றி செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.