இம்முறை இலங்கையில் நடத்தப்படவுள்ள ஐநா சர்வதேச வெசக் தின கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்வுக்கான அனைத்து ஆயத்தங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஐநா சர்வதேச வெசக் தின விழாவின் நிறைவு நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி தலதா மாளிகை சூழலில் சமய மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெறவுள்ளது.
இம்மாதம் 12ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள ஆரம்பமாகவுள்ள சர்வதேச வெசக் தின கொண்டாட்டம் மறுநாளான 13ம் திகதியும் இடம்பெறவுள்ளதுடன் அதில் கலந்துகொள்ளவுள்ள உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பிரதிநிதிகள் விசேட ரயிலினூடாக கண்டியை சென்றடையவுள்ளனர். அன்றைய தினம் விழாவில் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகளுக்காக புத்தரின் புனித தந்தம் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் தலதா மாளிகையின் நூதனசாலையில் உள்ள அனைத்து வணக்கத்துக்குரிய பொருட்களையும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்டியில் நடைபெறும் மாநாட்டையடுத்து விசேட பெரஹராவொன்றும் தலதா மாளிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச வெசக் தின கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்துசபை மற்றும் தனியார் துறையினூடாக மேலதிக பஸ்களும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும் கண்டியில் பலவிடங்களில் சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.