பேரிச்சம்பழங்களுக்கு புதிய வரி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்தி ஆதாரமற்றவை என்று வர்த்த மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு 60 ரூபா வரி அறவிடப்படுகிறது. அது விசேட வர்த்தகப் பொருளுக்கான அறவீடாகும். விசேட வரி எதுவும் விதிக்கப்படவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பேரிச்சம்பழம் ஒரு கிலோவிற்கு 130 ரூபா வரி விதிக்கப்பட்டிருந்தது. அதாவது 15 வீத சுங்க வரி, 7.5 துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி வரி, 25 வீத மேலதிக வரி, 11 வீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் 2 வீத தேசத்தை கட்டியெழுப்பு வரி என வரி விதிக்கப்பட்டிருந்தது.
2015 நவம்பர் மாம் 20ம் திகதி மேற்கொள்ளப்பட்ட அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பின் போது பேரிச்சம்பழங்களுக்கான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு 60 ரூபா விசேட இறக்குமதி வரி மட்டுமே விதிக்கப்பட்டது. அதற்கமைய இதற்கு முன் விதிக்கப்பட்ட வரியை விடவும் 70 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், சமய நிகழ்வுக்காக வௌிநாட்டு அரசுகளினால் வழங்கப்படும் பேரிச்சம்பழங்களுக்கு அரசினால் செலுத்தவேண்டிய வரிக்கான நிதி விடய பொறுப்பு அமைச்சுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
2016 நவம்பர் 21ம் திகதி வௌியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக குறிப்பிடப்பட்ட விசேட வர்த்தக பொருளுக்கு விதிக்கப்பட்ட வரி கடந்த 3ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, புதிய வரி விதிப்பாக அர்த்தப்படுத்தினாலும் அது புதிய வரி விதிப்பல்ல. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வரிவிதிப்பை மேலும் தொடர்வதற்கானது. எனவே சில ஊடகங்களில் வரி அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்ட செய்தியானது எவ்விதத்திலும் ஆதாரமற்றதாகும். என்று அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் றமழான் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பேரிச்சம்பழங்களுக்கு புதிதாக வரி விதிக்கப்படவில்லை என்றும் அத்திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது.