இந்த ஆண்டுக்கான தேசிய போர்வீரர்கள் மாதத்தைப் பிரகடனப்படுத்தி, அதற்கான முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அணிவித்தல் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
மூன்று தசாப்தங்களுக்கு கூடுதலான காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுறுத்திய மனிதாபிமான நடவடிக்கையில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர்வீரர்கள் மற்றும் தமது அவயவங்களை அர்ப்பணித்த போர்வீரர்களை நினைவுகூரல் மற்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்குடன் இந்த போர்வீரர் மாதம் வருடாந்தம் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படுகிறது. அதனோடிணைந்ததாக போர்வீரர் கொடி விற்பனையும் இடம்பெறுகிறது.
ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா முதலாவது நினைவு கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.
கடந்த ஆண்டு கொடி விற்பனையில் கிடைத்த வருமானம் மாகாண ஆளுநர்களால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் இந்த ஆண்டுக்கான கொடியை ஜனாதிபதி மாகாண ஆளுநர்களிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.ஜீ.ஜீ.கித்சிறி, மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, கடற்படைத் தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு படை பிரதானிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.