இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து முதியோர் பராமரிப்பாளர்களை (Care Givers) அனுப்பும் திட்டத்திற்கமைய வாய்ப்பினை பெற்ற 8 பேருக்கான விமான டிக்கட்டுக்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் நேற்று (02) வழங்கினார்.
இஸ்ரேலுக்கு ஐம்பது பராமரிப்பு பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் அந்நாட்டு (Population & immigration authority on behalf of the government of the Israel) மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய 45 நாட்கள் பராமரிப்பு மற்றும் ஆங்கில பயிற்சியின் பத்து நாட்கள் இஸ்ரேல் பயிற்சியாளரினால் பயிற்சியளிக்கப்பட்ட குறித்த 8 பேரும் அந்நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான விளம்பரங்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டதுடன் அதற்காக 1465 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் தகைமையுடைய 122 பேரில் முதற் கட்டமாக 8 பேர் தெரிவு செய்யப்பட்டு நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலுக்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுக்கான ஒப்பந்தம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படவுள்ளதுடன் ஆகக்குறைந்த சம்பளமாக 163,000 ரூபா வழங்கப்படவுள்ளது. இன்று இஸ்ரேலுக்கு செல்லும் முதற்குழுவில் 5 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்நாட்டு சட்ட திட்டங்களை பின்பற்றி நடக்குமாறு அறிவுரை வழங்கிய அமைச்சர் இலங்கையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பணியாற்றி வருவது ஒவ்வொரு இலங்கையரினதும் கடப்பாடும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் விண்ணப்பித்த 1465 பேரில் 122 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டமைக்கு ஆங்கில அறிவின்மையே பிரதான காரணம் என்றும் ஆங்கில அறிவை மேம்படுத்த அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பணியகத்தின் தலைவர் ஆர்.கே. ஒபேசேக்கர, பொது முகாமையாளர் கே.ஓ.டீ பெர்ணாண்டோ, மேலதிக பொது முகாமையாளர் டப்ளியு.என். வன்சேக்கர, பிரதி பொது முகாமையாளர் (பயிற்சி) மங்கள ரந்தெனிய ஆகியோர் கலந்துகொண்டனர்.