சர்வதேச வெசாக் விழா கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சூழல் புனிதமானது’ என்ற நிகழ்ச்சித்திட்டம் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன தலைமையில் வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகையில் ஆரம்பமானது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப மத்திய மாகாண சபையினால் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கண்டி நகரத்தின் முக்கிய இடங்களை துப்பரவு செய்யும் பணி இதன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.
வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகைக்கு வரும் பக்தர்கள் கைகளை கழுவுவதற்கான இரண்டு உபகரணங்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்ற கண்டி கெட்டம்பே விளையாட்டு மைதானத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.