மே தின ஊர்வலங்கள், கூட்டங்களை முன்னிட்டு கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் விஷேட போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகளை பொலிஸார் ஒழுங்கு செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இப்போக்குவரத்து விதிமுறை அமுலாகும் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் சுமார் 15 மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறுவதன் காரணமாக பயணிகள் பஸ் போக்குவரத்து பாதைகளிலும் மாற்று வழிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இத்தினத்தில் 138, 154, 176 மற்றும் 103 இலக்க பஸ்களுக்கு இவ்வாறு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து கண்டி செல்லும் வாகனங்கள் மற்றும் கண்டியிலிருந்து கொழும்பு வரும் வாகனங்கள் பொலிஸாரின் அறிவித்தல்படி மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கண்டி வீதியினூடாக கொழும்பிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் பண்டாரநாயக்க சுற்றுவட்டம், இங்குருகடே சந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க சுற்றுவட்டம், ஆமர் வீதி சந்தியினூடாக சென்றல் வீதி வழியே புறக்கோட்டைக்கு பயணிக்க முடியும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை, பேஸ்லைன் வீதி, சரணங்கர வீதி மற்றும் கொம்பனிவீதி ஆகிய பிரதேசங்களின் சில வீதிகள் மூடப்படும் அதேவேளை மேலும் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மே 01ம் திகதி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடைபெறவுள்ள ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கென 4,765 பொலிஸார் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கண்டியில் போக்குவரத்து ஒழுங்குமுறைகளுக்கும் பாதுகாப்பு நடைமுறைப்படுத்துவதற்காக 3,500 பொலிஸார் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மே தின ஊர்வலமும் கூட்டமும் கண்டியில் நடைபெறவுள்ளது.