இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மலேசியாவின் பிரபல பெற்றோலியக் கம்பனியான PETRONAS கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி Datuk Wan Zulkifee Wan Ariffin உள்ளிட்ட பிரதிநிதிகளை நேற்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி அவர்கள் இந்த அழைப்பை விடுத்தார்.
தமது கம்பனி இலங்கைக்கு எரிவாயு மற்றும் பெற்றோலிய உற்பத்திகளை வழங்கியுள்ள போதிலும் இலங்கையுடன் நீண்டகால திட்டங்கள் இல்லாதிருப்பதனால், இலங்கையுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் நோக்குடன் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக Datuk Wan Zulkifee Wan Ariffin இதன்போது தெரிவித்தார்.
உலகின் பிரபலமான கம்பனிகள் பட்டியலான “Fortune 500” உள்ளடக்கப்பட்டுள்ள ஒரேயொரு மலேசிய கம்பனியான PETRONAS கம்பனி தற்போது 30 நாடுகளில் புதிய திட்டங்களுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமாதான சூழல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருத்தமானது என்பதனால், PETRONAS போன்ற உலக அங்கீகாரம் பெற்ற கம்பனியொன்று நாட்டில் முதலீடு செய்தால், அது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.
தான் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்த Datuk Wan Zulkifee Wan Ariffin அவர்கள், தமது சுற்றுப்பயணத்தின் போது பெற்றோலிய மற்றும் சக்திவலு அமைச்சர்களையும் சந்தித்து வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் மலேசிய உயர்ஸ்தானிகர் Wan Zaidi Wan Abdullah அவர்களும் கலந்து கொண்டார்.