யாழ்ப்பாணம் - மன்னார்- திருகோணமலை பெருந்தெருக்கள் மற்றும் தம்புல்ல- திருகோணமலை அதிவேக பாதை உட்பட இலங்கையின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குதாக இந்திய வீதிப்
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவை நேற்று (26) சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நாளொன்று 23 கிலோ மீற்றர் வரை பெருந்தெரு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவீன தொழில்நுட்பம் மற்றும் அனுபவங்களைக் கொண்டு நூறாண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய வகையிலான திறமை தற்போது இந்தியாவில் காணப்படுகிறது. உயர் தரத்துடன் கூடிய வீதிகளை உருவாக்குவதற்கு இலங்கையுடன் கைகோர்ப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் இந்திய அமைச்சர் மேலும் கருத்து தெரிவித்தார்.
மேலும் பெருந்தெருக்கள் மற்றும் அதிவேக வீதிகள் அண்மித்த பகுதிகளில் புதிய பொருளாதாரங்களை உருவாக்குவதற்கு அவசியம் மற்றும் வாய்ப்பு தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை ஒன்றிணைக்கும் பெருந்தெருக்களை நிர்மாணிப்பதனூடாக வடக்கின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பின்னணியை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் ரஜீவ் குமார், வீதிப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சஞ்சே மித்ரா, மேலதிக தனிப்பட்ட செயலாளர் வவ்பவ் டன்கே ஆகியோர் இந்திய தரப்பு பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர்.
இலங்கை சார்பில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிந்திராங்கனி வாகீஸ்வர, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் வலய சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் அசோக்க கிரிகம மற்றும் விசேட உதவியாளர் சென்றா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.