மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தின் புதிய இரண்டு மாடிக் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (25) காலை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய குரு வ.சோதிலிங்கம் அவர்களின் வழிபாடு மற்றும் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
பல்வேறு இட நெருக்கடிகளுக்குள் இயங்கி வரும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கென அமைக்கப்படவுள்ள புதிய கட்டடம் மூலம் இப்பிரதேச செயலகத்தின் இட நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக திராய்மடுவில் அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செலயகத்திற்கான புதிய கட்டடத்திற்கென 200 மில்லியன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கென முதல் கட்டமாக 20 மில்லியன், கோரளைப்பற்று பிரதேச செயலகக்கட்டடத்துக்கு 13 மில்லியன், ஏறாவூர் நகர் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச செயலகக்கட்டங்களுக்காக தலா 10 மில்லியன், மண்முனைப் பற்று பிரதேச செயலளக்கட்டத்துக்காக 7 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடத்தில் மண்முனைப்பற்று, கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகக்கட்டங்களுக்கு அடிக்கல் நடப்பட்டதுடன், மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்கான புதிய அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டதிடல் பணிப்பாளர்களான எஸ்.பிரபாகரன், கே.குணரெத்தினம், கட்டிட பொறியிலாளர் எஸ்.கிலக்சன் கிராம சேவையாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் இந் நிழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.