மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்று துன்பங்களை அனுபவித்த 116 பேர் நேற்று (24) அதிகாலை நாடு திரும்பினர்.
இவர்களில் குவைத்துக்கு சென்ற 65 பேர், சவுதி அரேபியாவிற்கு சென்ற 31 பேர் மற்றும் கட்டார் சென்ற 20 பேருமாக 116 பேர் உள்ளடங்குகின்றனர்.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய 31 பேரும் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தின் சுரக்ஷா இல்லத்தில் தங்கியிருந்தவர்களாவர். கட்டாரில் இருந்த நாடு திரும்பியவர்களில் 20 பேர் ஆண்கள் என்றும் அவர்களில் 5 பேருக்கு வீட்டுக்கு செல்வதற்கான பயணச்செலவை வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்த நாடு திரும்பிய 31 பேரும் அந்நாட்டு தூதரகத்தின் சுரக்ஷா இல்லத்தில் இருந்த பெண்களாவர். இவர்கள் திருகோணமலை, அம்பாறை, குருணாகல, அநுராதபுர மற்றும் கண்டி உட்பட நாட்டின் பல பிரசேதங்களை சேர்ந்தவர்களாவர்.
கடந்த ஆண்டு இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த புலம்பெயர் தொழிலாளர்கள் 4989 பேர் நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் இருந்து 1669 பேரும் சவுதி அரேபியாவில் இருந்து 684 பேரும் கட்டாரில் இருந்த 2190 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு 2734 பேர் இவ்வாறு துன்பங்களை அனுபவித்து நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.