கண்டியில் வாகன நெருக்கடிக்கு பிரதான காரணம் பொதுப் போக்குவரத்தை விடவும் தனியார் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குவதே பிரதான காரணம் என்று மாநகர மற்றும் மேல் மாகாண
அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
கண்டி டொபேஷ் ஹோட்டலில் நடைபெற்ற கண்டியை மூலோபாய போக்குவரத்து நகராக அபிவிருத்தி செய்வது தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், 1987ம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையில் ஒப்புநோக்கும் போது 80 வீதத்தில் இருந்து 50 வீதமாக பொதுப்போக்குவரத்துப் பாவனை குறைவடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு 15000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனூடாக கண்டியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல், நகர நீர்வள முறையை அபிவிருத்தி செய்தல், வடிகாண் தொகுதியை மீள்புனரமைப்பு செய்தல் மற்றும் நகர வசதியை மேம்படுத்தல் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தொட்டவிலிருந்து மடவல ஊடாக திகன வரையான குறுக்குப்பாதை, தர்மாசோக்க மாவத்தையை விரிவுபடுத்தல், மத்திய ஓடையை புனர்நிர்மாணம் செய்தல், கண்டி குளத்தை புனர்நிர்மாணம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய திட்டங்கள் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.