மலேரியா அற்ற நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் ஏற்படும் அபாயம் இன்னும் காணப்படுகிறது. இனியொரு மலேரியா நோயாளி உருவாகாமல் இருப்பதற்கு அரசாங்கம் அதிக
முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
நாளை, ஏப்ரல் மாதம் 25ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக மலேரியா தினம் நிமித்தம் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (24) நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உலகம் இன்னும் மலேரியா நோயிலிருந்து மீளவில்லை. மலேரியாவை இல்லாதொழிப்பதற்கு உலக சுகாதார தாபனம் 15 வருட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது. 2015ம் ஆண்டளவில் உலகில் 91 நாடுகளில் மலேரியா நோய் காணப்பட்டது. உலக சனத்தொகையில் 212 மில்லியன் பேர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டளவில் 4,29,000 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தெற்காசிய நாடுகளில் 1.4 பில்லியன் பேர் மலேரியா நோய்க்கு தற்போது முகம் கொடுத்து வருகின்றனர்.
2009ம் ஆண்டளவில் நாம் மலேரியா நோயினை ஒழிக்க ஆரம்பித்தோம். 2012ம் ஆண்டிலிருந்த மலேரியா நோயாளி கண்டறியப்படவில்லை. மலேரியா நோயிலிருந்து இலங்கை மீண்ட போதும் நோய் அபாயத்தில் இருந்து மீளவில்லை. மீண்டும் நாட்டுக்கு மலேரியா வருவதை தவிர்க்க வேண்டும். இலங்கையை சூழவுள்ள நாடுகளில் மலேரியா காணப்படுகிறது.
மலேரியாவில் இருந்து மீள்வது என்பது பாரிய சவாலாகும். மீண்டும் ஒரு மலேரியா நோயாளி உருவாகாமல் இருப்பதற்கு அரசாங்கம் அதிகம் பாடுபடுகிறது. அதற்கான பெருமை மலேரியா தடுப்புத் திட்டத்தையும் அதற்காக பாடுபட்டவர்களையும் சாரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜே.எம்.டப்ளியு ஜயசுந்தர பண்டார, மலேரியா தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் எச்.டீ.பி. ஹேரத் மற்றும் மலேரியா தடுப்புத் திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.