மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டின் முழு பெறுமதியையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீதொட்டுமுல்ல அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை நேற்று (23) மாலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுவரையில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரை தெளிவுபடுத்திய பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளிடம், அபாய வலயத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுத்தல், பாதிக்கப்பட்ட சொத்து விபரங்களை மதிப்பிடும் வரையில் 50,000 கொடுப்பனவு வழங்கல், குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவை வழங்கல், வீடமைப்பு அதிகாரசபையில் பெற்றுக்கொண்ட கடனில் கட்ட வேண்டிய மிகுதித் தொகையை தள்ளுபடி செய்தல், சிதைந்த பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கான நட்டஈட்டை வழங்கல் போன்றவை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை அன்று பாதிக்கப்பட்ட மக்கள் பகுதிவாரியாக பிரதேச செயலகத்திற்கு சென்று தமது காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறும் வீட்டுரிமைப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளை வியாழக்கிழமை சென்று தீர்த்துக்கொள்ளுமாறும் மக்களிடம் அரச அதிகாரிகளிடமும் பிரதமர் பணித்தார்.
இவ்வடிப்படை பிரச்சினை தொடர்பில் தீர்வு பெற்றுகொண்ட பின்னர் ஏனைய செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா, பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர, பிரதமர் அலுவலக பிரதானி ரோஸி சேனாநாயக்க, பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.